Wednesday, May 27, 2015

தொக்கி நிற்பவை




நேரம் நெருங்கிக் கொண்டேயிருக்கு
விடப்போகும் கடைசி மூச்சினை
வீடே நெடுநாட்களாய் எதிர்பார்த்து நிக்குது
தொண்டையிலிருந்து இறங்கவா வேணாமா
போராட்டம் நடத்துது காய்ச்சிய பசும்பால்
கால்மாட்டில் கொள்ளுப்பேரன் பேத்திகள்
தலைமாட்டில் கணவன் மகன் மகள்
வெறிக்குது பார்வை விட்டத்தை நோக்கி
கடைசியாய்...கடைசியாய்..
நினைவுகளில் நிழலாடுகிறான்
கல்லூரிக் காதலன்









Thursday, May 21, 2015

தவறு




கனவிலும்கூட தவறொன்றை
சரியாக நிறைவேற்ற முடியலையே
யாரிடமாவது வசமாக
அகப்பட்டுக் கொள்கிறேன்
நொந்துகொண்டான் சாமானியன்
நிஜத்தில்கூட அவற்றை
செயல்படுத்த நினைக்காதேயென
உன்னை எச்சரிக்கத்தான்
அசரீரியாய் ஒலித்தது ஓர் குரல்









தாய்மொழி




தமிழ்ப் புத்தாண்டுதின
சிறப்பு அர்ச்சனைகளில் ஒலிக்கும்
சமஸ்கிருத மந்திரங்களுக்கு மத்தியில்
தமிழன்
தனது தாய்மொழியை
ஒருகணம் நினைத்துப்பார்க்கிறான்









Wednesday, May 20, 2015

முத்தம்




விரும்பிக் கொடுப்பவை
விரும்பாமல் கொடுப்பவை
விரும்பிப் பெற்றுக்கொள்பவை
விரும்பாமல் பெற்றுக்கொள்பவை
மொத்தமாய் நால்வகை.











குணம்




பணிவும் துணிவும் துணைநிற்பின்
பதவிகள் பாராட்டுகள் வந்தடையும்
அன்பும் அறனும் துணைநிற்பின்
அகம் புற வாழ்க்கை மேலோங்கும்
விவேகமும் விடாமுயற்சியும் துணைநிற்பின்
வாய்ப்புகள் அனைத்தும் வாகைசூடும்
வாய்மையும் தூய்மையும் துணைநிற்பின்
காய்மையில்லா வார்த்தை வசப்படும்









கேள்விக்குறி




கேள்விக்குறி
ஏன் ஆச்சர்யக்குறிபோல
திமிராக
நிமிர்ந்து நிற்கவில்லையென
நினைத்தததுண்டு
எதையுமே ஆழ அகலம் புரிந்து
யார்மனதும் புண்படாவண்ணம்
விவரமாகக் கேட்டு
விடைக்காகக் காத்திருக்க
உணர்த்துவதே
அவ்வளைவும் பணிவும்









Friday, May 15, 2015

பூக்கள்




மலரும் ஒரு முக்கியமான பேசுபொருள்
மாளாத காதல் சொல்லும் சங்கத்தில்
ஊடல் கூடல் கருணை கோபம் தாபம்
உவமை உருவகங்களாய் பாடல்களில்
மகரந்தச் சேர்க்கைக்கு மட்டும்தானா அவை
மௌனமாய் பூமி நமக்களிக்கும் ரகசியம்












யாதும் ஊரே




நதிக்கரையில் உடை கழட்டி
அழுக்குதீர அடித்துதுவைத்து நீராடி
வெயில்காய உலர்த்திவிட்டு உடுத்தி
நகர்வலம் புறப்பட்டான் நாடோடி
இயற்கையிருக்கு எண்சான் மேலுக்கு
வயிருதான் வாடி வத்தியிருக்கு
யாதும் ஊரே யாரும் கேளீர்











தோழி




தோழியுடன் கைகோர்த்து நடக்கும்
மழைப்பருவநாட்கள் மறக்கமுடியாதவை
செம்மலர்கள் பூத்துக்குலுங்கும் மரக்கிளையை
ஆசைதீர நான் பிடித்துக்குலுக்க
அவளுக்கென்றே அதுவரை காத்திருந்ததுபோல
மழைத்துளிகள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியோடு நீராட்ட
நிலைகுலைந்து “ஒன்ன!” என சிணுங்கிக்கொண்டே
அடுத்து வரப்போகும் மரக்கிளைக்காக
ஆவலுடன் நடைபோடும்
அவளின் அழகை என் சொல்ல!











நெம்புகோல்




வெற்றிகள் பலவற்றை தேடித்தர வல்ல
வெல்வதெப்படி என்ற சூட்சுமம் அறிந்த
வெளிச்சப் பாதையை காட்டிச் செல்ல
வெட்டொன்று துண்டு ரெண்டு வெளிப்படையான
அயற்சியால் முடங்கிப்போகும் அனைவரையும் தொடர்
முயற்சியால் முன்னேடுக்கவல்ல தேவையொரு பயிற்சியாளர்.



உத்தமவில்லன்




உத்தமவில்லன் பற்றிய இதுவரையிலான எண்ணச்சிதறல்களின் தொகுப்பு இங்கே:

படைப்பில் பல உருவகங்களை கையாளுதல், ரசிகர்கள் அதை இனங்கண்டு சிலாகித்தல் இதெல்லாம் ராஜா/கமல்-ரசிகர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறுகிற சுகானுபவம்.

வெகுஜனமக்கள்/ஊடக எதிர்பார்ப்புகள் எப்படியெல்லாம் இருக்கிறதென்பது தெரிந்திருந்தும் பிடித்தவற்றை விடாப்பிடியாக செய்வதில் ராஜாவும் கமலும் ஒன்றே.

கமலின் பிரத்யேக அம்சமே வணிகப்படத்தில் கலையம்சங்களை அமைத்து விருந்து படைப்பதுதான். அந்தவகையில் உத்தமவில்லன் மிகப்பெரிய பாய்ச்சல் திரையுலகில்.

முடிந்தவரை பார்வையாளனை மேன்மையான ரசனைத் தளத்திற்கு இழுப்பது. அந்த முயற்சியில் உத்தமவில்லன் மிகப்பெரிய வெற்றி. ஒரு திரைப்படம் நமக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றால் அதன் திரைக்கதையின் பல தருணங்களில் படைப்பாளியின் ரசிப்புத் தன்மைக்கு மிக அருகில் நெருங்கி ரசித்திருக்கிறோம் என எடுத்துக் கொள்ளலாம். உத்தமவில்லன் அதுபோல ஒன்றுக்கு மேற்பட்ட பல உன்னதக் காட்சிகளை உள்ளடக்கியதாக இருப்பதே படைப்பின் முக்கியத்துவம்.

கதையை மேலோட்டமாகச்சொல்லி, எங்கே படமாக்குங்கள் பார்க்கலாம் என யாரிடம் கொடுத்தாலும், உத்தம வில்லனில் கால்வாசி கூட எட்டமுடியாது. இக்களம் கமலுக்கே.

சக படைப்பாளிகள் எனக் கருதப்படும் ஒவ்வொருவரையும் "கொஞ்சம் தூரமா தள்ளிப் போய் விளையாடுங்க தம்பி!" என உணர்த்தும் படைப்பாக உத்தமவில்லன்.

ஒரு பிரதி தன்னைத்தானே பிரதிபலித்துக் கொள்ளும் Self reflexivity மற்றும் புனிதங்களைச் சிதைப்பது - பின்நவீனத்துவக் கூறுகள். கதாநாயகன் கேன்சர் நோயாளி மாதிரி எத்தனை படம் பண்ணியாச்சி என கேபி பாத்திரம் மூலமாகவே உத்தம வில்லனையும் பகடிசெய்துகொள்ளும் பாங்கு ரசிக்கத் தக்கது.

இதிகாசகதை மூலமாகவே, இதிகாச நாயகர் பாத்திரம் வழியாகவே தொன்று தொட்டு நம்பப்பட்டுவரும் மூட நம்பிக்கைகளை தனக்கே உரிய சித்தாந்தங்களைக் கொண்டு கட்டுடைத்தல் செய்யும் படைப்புதான் உத்தமவில்லன்.

"உங்கள்ள ஒருத்தன் ஒழுங்கா திரைக்கதை எழுதுறதுக்குள்ள நான் போய்சேந்திடுவேன் போல" என்ற ஆதங்கத்தையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் கமல் உத்தம வில்லன் படைப்பின் மூலம், பாத்திரத்தின் மூலம்.

திணிக்காத சோகம், துருத்தாத நகைச்சுவை, தரமான வசனம், மேன்மையான ரசனை - கமலிடமிருந்து.

"மாயாததென்றும் நம்.. அறிவும் அன்பும்.." - இதுதான் கமல். இந்த அடிப்படையில் பார்த்தால் அன்பே சிவத்தின் இன்னொரு வடிவம் உத்தமவில்லன்.

நகைச்சுவைக்காட்சிகள் குறிப்பிடத்தக்கவை. கொம்பு வாத்தியக்காரர்களை பகடி செய்யும் காட்சிகள் ஒவ்வொன்றும் அரங்கில் கைத்தட்டல்களை அள்ளுது.

எம்.எஸ்.பாஸ்கர் பாத்திரம் பன்முகத்தன்மை கொண்டது. எதிர்காலத்தில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். உன்னதமான கலைஞன்.

பட்டிமன்றம் வைக்குமளவுக்கு பக்கக் கதாபாத்திரங்கள் (எம்எஸ்பா, ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜா, கேபி, நாசர்) ஒவ்வொன்றும் சோபித்தது படைப்பை மேலும் உன்னதமாக்குகிறது.

நடிப்பில் மேலும் சில சிகரங்களை தொட்டிருக்கிறார் கமல். சத்தம்போடாத அழுகையாக இருக்கட்டும், மகனும் அவனது பெண் நண்பியும் மோதிக்கொள்ளும் உரையாடலை ரசித்து அந்த இடத்தைவிட்டு வெளியேறி கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்து இன்புறும் காட்சியாகட்டும், தனது மகளைப் பற்றி முதன்முதலாக மகளின் வளர்ப்பு அப்பா மூலம் தெரிந்துகொண்டு தனது இயலாமையை கண்களிலே வெளிப்படுத்தும் பாங்காகட்டும், முகம் சிதையும் கடைசித் தருணங்களில் நெருக்கமான காதலியிடம் முகத்தை கவசம் மூடிய நிலையிலும் முத்தம் கொடுக்கும் காட்சியாகட்டும்.. இந்த முறை ரசிகர்களுக்கு நல்ல தீனி.

கமலுக்கு ஒரு மூன்றாம்பிறை என்றால் ஊர்வசிக்கு ஒரு உத்தமவில்லன். ஒரே காட்சியில் உச்சம்! நடிப்புராட்சசி. சிரிப்பு, அழுகை, இயலாமை, தன்னிலை உணர்தல் என பலதரப்பட்ட கலவை உணர்ச்சிகளை நொடிக்கு நொடி மாற்றிக்கொண்டே வசனங்களில் ஏற்ற இறக்கத்துடன் கையாள பண்பட்ட கலைஞரால் மட்டுமே சாத்தியம்.

பிரபஞ்சம்,உலகு தோன்றுவதிலிருந்து வம்சவிருத்தி,காதல் என முடிச்சிகளாக தொடரும் கருத்துக்களுக்கு அந்தாதிவகை எவ்வளவு பொருத்தமா இருக்கு சாகாவரம் பாடலுக்கு! பாடல் வரிகளில் கமலின் அடுத்த கட்டம் இது. " முளைத்து முறித்தும் துளிர்க்கும் வாழைதன் மரணம் குள்ளே விட்டது விதையே" என படத்தின் ஆதார கருத்தினை அற்புதமாக பிரதிபலிக்கும் வரிகள்.

பின்னணி இசையாக ம்ருத்துன்ஜெயஜெயஜெய எட்டாம் நூற்றாண்டையும் கடந்து நிகழ்காலத்திலும் வரும் இடங்கள் சிறப்பு! பின்னணி இசை கூட இதில் ஒரு முடிச்சி. ஜிப்ரான் தம்பிக்கு அழுத்தமான கைகுலுக்கல்கள். படைப்பிற்கு நல்லதொரு பரிமாணத்தை அளித்திருக்கிறார். கமல் குரலில் மின்னல்போல வந்துமறையும் ஹம்மிங் காதலாம் கடவுள்முன் பாடலை மேலும் இனிமையாக்கிவிடுகிறது.கேட்கக்கேட்க அப்படியே சுண்டியிழுக்கும் ஒன்று.

ஒளிப்பதிவாளர் ஷம்தத்தின் அளப்பரிய உழைப்பு, அர்ப்பணிப்பு காட்சிகளில் தெரிகிறது. ஒவ்வொரு கமல் படத்திலும் கமலின் முகம் முதன்முதலாக தெரியவரும் காட்சியே கவிதைத்தனமாக இருக்கும். அவ்வரிசையில் இப்படம் ஒரு மைல்கல். அடுக்கு வணிக வளாகத்தின் மேல்தளங்களில் ஏறி நின்று மனோரஞ்சன் கையசைக்க கீழிருந்து ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கையசைக்கும் காட்சியின் பிரமாண்டம் ஒவ்வொரு கமல் ரசிகரது மனதிலும் நீங்காமல் இடம் பெறப்போகிறது. மற்றும் உத்தமன் படலத்தில் வரும் பாடல் காட்சிகள் ஒவ்வொன்றும் தேர்ந்த முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. காதலாம் கடவுள்முன் பாடலில் இருயாழ்களை வலது,இடதுபுறத்தில் குறுக்காக வைத்து கற்பகவல்லி வாசிக்கும்நிலையை கீழேயிருந்து காட்டுமிடம் மிகவும் அருமை.

விஸ்வரூபத்தைத் தொடர்ந்து லால்குடி இளையராஜாயின் கலைப்பணி உத்தமவில்லனிலும் சிறப்பு. எட்டாம் நூற்றாண்டு கால கட்டிடங்கள், மாளிகைகள் ஒவ்வொன்றுமே கலைப் பணிக்கு சிறந்ததொரு டெஸ்டிமொனியல்.

காதலாம் கடவுள்முன், இரணியன் பாடல்களில் உடையமைப்பு கண்ணைக் கவர்கிறது. கௌதமிக்கு பாராட்டுக்கள்.

பொதுவாக எல்லாக் காட்சியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட திறமைகள் (வசனம், கலை, ஒளிப்பதிவு, உடையமைப்பு, அலங்காரம், நடனம்) போட்டிபோட்டுக் கொண்டு சங்கமிப்பதே உத்தமவில்லனின் தரத்தின் உயர்வுக்கு முதன்முதல் காரணம்.

கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, நடனம், பாடலாசிரியர் என பல தளங்களில் கோலோச்சி நிற்கும் இந்திய சினிமாவின் நிரந்தக் கலைஞன் கமல்.

பாத்திரத் தேர்வு, ஒவ்வொருவருக்கும் படைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் என ஒன்றுவிடாமல் ஜொலிக்கும் படைப்பாளியாய் கமல்.

மத, சமய, கலாச்சார, பண்பாட்டுத்தள ஞானத்தோடு சினிமாவை நகர்த்திச் செல்லும் தொடர்சங்கிலியின் கடைசி முடிச்சி கமல்.

உத்தமவில்லன் கமலின் ஆகச்சிறந்த படைப்புகளில் மிகவும் முக்கியமானது.

ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் ஒரு தீபம் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் கமல் அத்தீபத்திற்கு எண்ணெயையும், பிராணவாயுவினையும் அள்ளித் தந்திருக்கிறார்.

கையை குழச்சி விரல்களின் பின்புறத்தையெல்லாம் நக்கி சாப்பாட்டை வெளுத்து வாங்கும் பழக்கத்தை ரொம்ப அழகா பதிவு செய்திருக்கிறார் கமல்.

திரைக்கதை கமல் சோபித்த பல காட்சிகளில் ஒருசோறு பதம்:

பட வெற்றிக்கான பார்ட்டியில் எல்லோரும் களித்துக்கொண்டிருக்க, கண்ணாடிக் கதவுக்கு வெளியெ அபர்ணா ஹிப் ஃபிளாஸ்கை வைத்துக்கொண்டு அழுது புலம்பும் காட்சியும், அதைதொடர்ந்து கமலும் வெளியே சென்று அபர்ணா மற்றும் சக டாக்டர் நண்பரோடு சேர்ந்து ஆறுதல் சொல்லிக்கொள்ளும் இடம் ஒரு கவிதை. கண்ணாடிக்கு உள்ளெ சொக்கு செட்டியாரின் பரிதவிப்பினால் வெறும் நகைச்சுவையாக மட்டுமே ரசிகர்களுக்கு சத்தமில்லா இக்காட்சி தெரிந்திருந்தாலும், உயிர்கொல்லி நோயின் தீவிரத்தை அபர்ணா உணர்ந்ததற்கு பிறகு வரும் காட்சி என உணரும் போதுதான் அவளின் துக்கம் புரியும்.

தந்தை-மகன், தந்தை-மகள், கணவன்-மனைவி, நடிகன்-காதலி, இயக்குனர்-நடிகர் குரு-சிஷ்யன், முதலாளி-தொழிலாளி, நடிகன்-பிஏ இப்படி ஒவ்வொரு பந்தங்களுக்கும் காட்சிகளை செதுக்கி இனி வரும் காலங்களில் சிலாகித்துக் கொண்டே இருக்கும்படி உத்தமவில்லனை படைத்திருப்பதால் கமலும், உத்தமவில்லனும் சாகாவரம் பெற்றுவிடுகிறது.