Saturday, November 8, 2014

அகவை 60 - கமல்




கலை ஞானியின் பிறந்தநாளான 2014 ஆண்டு நவம்பர் 7 - அவரது வாழ்க்கை ஓட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல். அறுபதாம் பிறந்தநாள். அதையொட்டி தொலைக்காட்சி ஊடகங்களில், பத்திரிக்கைகளில், இணையங்களில் நேர்காணல் என்ற பெயரில் கேட்கப்படும் பலதரப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் சோர்வே இல்லாமல் கருத்துமழை பொழிந்துகொண்டே இருக்கிறார். நாட்டை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு இந்தியப் பிரதமர் மோடி குறிப்பிட்ட பிரபலங்களின் பட்டியலில் தென்னிந்தியாவிலிருந்து கமல் இடம்பெற்றிருந்தார். நற்பணி மன்றம் வழியாக பல வருடங்களாக தமிழகத்தில் எண்ணற்ற பல ரசிகர்களை ஒன்றிணைத்து பல நல்ல திட்டங்களை (சாக்கடைகளை சுத்தம் செய்தல், ரத்ததானம், பள்ளி சீருடை வழங்குதல், தையல் மெஷின், மூன்று சக்கர சைக்கிள் வழங்குவது) செயல்படுத்தி வந்த கமலுக்கு , கமல் ரசிகர்களுக்கு பிரதமரின் இந்த அறிவிப்பு ஒரு அங்கீகாரமாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதையொட்டி இந்தப் பிறந்தநாளில் சென்னை மாதம்பாக்கம் ஏரியைச் சுத்தம் செய்யும் பணியை தமிழக அரசியல் தலைவர்கள் முன்னிலையில் கமல் தொடங்கிவைத்தார். பிறந்த நாளில் கேக் வெட்டுவது போல இந்தமுறை குப்பை வெட்டப் போகிறேன் எனவும் நகைச்சுவையாக அறிவித்திருந்தார். இதுபோலவே தமிழகத்தின் பல்வேறு ஏரிகளை சுத்தம் செய்யும் திட்டங்கள் நற்பணி மன்றத்திற்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார் கமல்.


எப்படி ஒரு கமலின் திரைப்படம் திருப்தியைக் கொடுக்குமோ அதுபோலவே ஊடகங்களுக்கு / பத்திரிக்கைகளுக்கு நேர்காணல் என்ற பெயரில் கமல் சொல்லும் கருத்துக் குவியல்களும். சினிமா மட்டுமல்லாது உலகின் எல்லாவற்றையும் அலசி ஆராயும் குணம் கமலுக்கு நிறையவே இருப்பதால் ஒவ்வொரு கருத்தும் தங்கு தடையின்றி வியக்கவைக்கும் உவமைகளோடு கொட்டிக்கொண்டே இருக்கும். எப்படி அவரது திரைப்படங்கள் நம்மை மீண்டும் மீண்டும் பார்க்கச் செய்வதுபோலவே ஊடகங்கள் வழி கமல் பகிரும் விஷயங்களும். இந்திய நாட்டில் இதுபோல ஒரு மனிதரை வேறு எங்கும் பார்க்க முடியாது என்பதை இதுபோன்ற ஒவ்வொரு வாய்ப்பிலும் நமக்கு உணர்ந்துகொள்ள முடிகிறது. அப்படி ஒரு வரிசையில் இந்த அறுபதாம் பிறந்த நாளை ஒட்டி ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் கமல் சொன்ன சிலபல கருத்துக்களை இங்கே பதிக்கிறேன்.


1) தசாவதாரம் - 9 மாதங்களில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வேறு யாராவது தொட்டிருந்தால் 350 நாட்கள் வந்திருக்கும்.

2) தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அந்தி மழை பொழிகிறது பாடலை முப்பது நாள் எடுத்தோம். Cuts அதிகமாகத் தெரியும். ட்ராலி போய்கொண்டு இருக்கும்போதே லென்ஸ் மாறும். ஏக் துஜே கேலியே படத்தில் வட்டார மொழி வசனங்கள் ஒரே காட்சியில் 350 அடி படமாக்கப் பட்டது.

3) தன் படங்களில் சுனாமி, எபோலா போன்ற விஷயங்களை முன்கூட்டியே சொன்ன விஷய்ம் பற்றிய கேள்விக்கு "வரலாற்றோடு பூகோளத்தையும் சேர்த்து படித்தால் இதெல்லாம் யாருக்கும் தோணும்"

4) சுகாதாரம் பற்றி பேசுகையில்: கொசுக்களுக்கு ஆயுளா உங்களுக்கு ஆயுளா என நீங்கதான் முடிவு பண்ணனும்.

5) பிரிட்டிஷ் இம்பீரியலிசம் என்பதுபோல ஜப்பான் மீது தான் தயாரித்த இரு அணுகுண்டுகளை வீசியது அமெரிக்க இம்பீரியலிசம். அம்மை நோயை உலகம் முழுதும் அழித்துவிட்டப் பிறகு இன்னமும் ஏன் அந்தக் கிருமியை அமேரிக்கா பாதுகாத்து வருகிறது ஏன்? புது நவீன உரங்களை உணவுப் பொருள் மீது தெளித்து ஏன் அவற்றை விஷமாக்க வேண்டும்? இதைக் கேள்வி கேட்கவும் ஆள் கிடையாது. பதில் சொல்லவும் ஆள் கிடையாது.

6) பகுத்தறிவு: சாண்டா கிளாஸ் இருப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்ல. மிக்கி மௌஸ் இருப்பதால் என்ன சவுகரியங்களோ அதேதான் அதற்கும். அந்த அளவுக்கு கடவுள் இருக்கும் பட்சத்தில் அது ஒரு பெரிய சந்தோஷமாக குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இருக்கும் பட்சத்தில் ஒண்ணுமில்லை. ஆனா மிக்கி மௌசிடம் கேட்டுத்த்தான் சொல்லணும் உங்க பொண்ணுக்கு என் பையனை கொடுக்கலாமா இல்லையா என சொன்னால் என்னால் அதை தாங்கிக்க முடியாது. அதுதான் என்னோட பகுத்தறிவு போராட்டம். என்னுடைய உதாரணத்தில் மஹா விஷ்ணு = மிக்கி மௌஸ்.

7) ரிச்சர்டு டாககின்ஸிடம் ஏன் இஸ்லாத் பற்றி விமர்சனம் செய்யமாட்டுறிங்க எனக் கேட்கையில் எனக்கு பாதித்ததை மட்டுமே நான் முதலில் பேச முடியும்னு சொல்றார். எனக்கு கூவக் கட்டு இருந்தால் நான் எதற்கு டைபாய்டு மருந்து சாப்பிடனும்? அதுவரும்போது அதையும் பார்த்துப்பேன்.

8) பெரியார் இராமானுஜத்தின் தம்பி. இராமனுஜம் இயேசு கிறித்துவின் தம்பி. "கோவில் கொடியவர்களின் கூடாராமாக மாறிவிடக் கூடாது" என்ற கருத்து பைபிலேலேயே இருக்கு. "tent of thieves ". பராசக்தி பேசும் நாத்திக வசனமும் இயேசு பேசியதாகச் சொல்லப்படும் வசனமும் ஒன்றாகவே இருக்கிறது. பகுத்தறி என்பது எல்லா காலக் கட்டத்திலேயும் வந்துகொண்டே இருக்கு.

9) காதலிக்கிறேன் என சொல்லும்போது பெற்றொர்கள் "அது எந்த சாதிப் பொண்ணு /பையன்?" எனக் கேட்பது எவ்வளவு பெரிய பகுத்தறிவின்மை! காதல் மாதிரி ஒரு போதிமரம் கிடையவே கிடையாது. கல்யாணம் (திருமண வாழ்க்கை) பெற்றோர்களிடம் அதை மறக்கடிக்கச் செய்யும்.

10) அமெரிக்கா போன்ற வசதி இருக்கிற நாடுகளில்தான் அவரவர் வேலைகளை அவரவர்களே செய்துகொள்கிறார்கள். காலை ஐந்தரைலிருந்து ஆறுமணிக்குள் ராஜாஜி கிணத்தடியில் அவரது துணிகளை அவரே துவைத்துக் கொண்டிருப்பார்.

11) கேரளாவில் படங்கள் நல்லா இருப்பதன் காரணம் அங்கே ஃ பிலிம் சொசைட்டியின் இயக்கம் ரொம்ப வலுவாக இருக்கிறது. பெங்காலிக்கு அப்புறம் கேரளாதான்.

12) சினிமாவில் கிடைக்கும் சின்ன சின்ன வெற்றிகளில் குதூகலம் அடஞ்சிரக் கூடாது. அப்படி அடஞ்சிருந்தா சத்யஜித்ரே கிடைத்திருக்க மாட்டார் நமக்கு. அவர் நேரா ஃ பிரான்ஸ் சென்று பயிற்சி எடுத்துக் கொண்டார். இங்க்லீஷ் கற்றுக்கொள்வதாக இருந்தால் எதற்கு மயிலாப்பூர் அய்யரிடம் கத்துக்கணும்? நேரா வெள்ளக்காரனிடமே கத்துக்கணும். இவர் சமஸ்கிருதம் மாதிரிதானே அதையும் பேசுவாரு!

13) மருதநாயகத்திற்காக நான் எழுதியதாக என் சொந்தக் கருத்தாக நினைத்துக் கொண்டிருந்த வரிகள் "எறும்பும் தன் கையால் எண் சாண்" - உண்மையில் அவ்வையார் எழுதியது.

14) 1975-ல் எனது இருபத்திரண்டு படங்கள் வெளியானது. மலையாளத்தில் 11, தமிழில் 12. ஒரே தீபாவளியில் இரு படங்கள் (சிகப்பு ரோஜாக்கள், மனிதர்களில் இத்தனை நிறங்களா? ) வெளியானது.

15) சபரிமலை ஸ்ரீஐயப்பன் படத்தில் காபரே டேன்ஸ் இருக்கும். பக்தி படம் என்பதால் அந்தப் படத்திற்கு விமர்சனம் செய்யவில்லை பத்திரிக்கைகள்.

16) எஸ்.பாலச்சந்தர், கே.பாலச்சந்தர், கமலஹாசன் போல எத்தனை படைப்பாளிகள் பாடல்களே இல்லாமல் படத்தை இயக்கி இருக்கிறார்கள் ? பெரிய இயக்குனர்கள் பெயர்களை எல்லாம் சொல்லுங்கள்.

Friday, October 17, 2014

அந்த ஒரு...




இங்கே
முக்கியமானதாக
எதையோ சொல்லநினைத்தேன்
மறந்தே விட்டேன்
எதை சொல்லநினைத்தேன்
என்பதை என்னால்
யோசிக்கவே முடியாவண்ணம்
புதுப்புது எண்ண நீர்க்குமிழிகள்
தொடர்ச் சங்கிலியாய்
மேலெழுந்து கொண்டே
மனதை
திக்குமுக்காட வைக்கின்றன
இவை என்று அடங்கும்
எப்போது மறந்துபோனதை
மீட்டெடுக்கப் போகிறேன் என்பதற்கு
இப்போதைக்கு உத்திரவாதமில்லை
காலம் அதன் திசையில்
மனதைக் கடத்திச் செல்கிறது
இனி அதன் எதோ ஒரு புள்ளியில்
மறந்துபோனது எட்டிப்பார்க்கும்
ஆனால் அப்போது
இதே சூழ்நிலை அமையப்பெறுமா
காலம்தான் அதற்கான
இன்னொரு திரைக்கதையையும்
எழுதி வைத்திருக்கும்
நான் இதுவரை வாசித்திராத
புதியதொரு பக்கத்தில்..









Thursday, August 14, 2014

வழிப்போக்கன்




கடைசி நிறுத்தமொன்றில்
தாமதமாய் வந்தடைந்தது
அதிகாலை எக்ஸ்பிரஸ் ரயில்
இறங்கையிலும் பெட்டி பைகளோடு
அவசரம் காட்டும் கூட்டத்தை
இடித்து ஏறி கழிப்பறையொன்றைத்
தேடிச் சென்றான் வழிப்போக்கன்









சேகுவேரா




குறைந்த விலையில்
பேரம்பேசி வாங்கி
பேரணிக்கு சீருடையாய்
மிடுக்காய் உடுத்திச் சென்ற
புரட்சி சேகுவேரா டீஷர்ட்
ஒருமுறை துவைத்து
கசக்கும்போதே சாயம் போனது.



பாதுகை




திமிறிய கூட்டத்தில் இடித்துக்கொண்டு
திருக்கோயில் நுழைந்தான் ராமன்
திரும்பி வந்தபின் தேடினான் தேடினான்
விட்டுச்சென்ற புத்தம்புது பாதுகைகளை
தேடிக்கொண்டே இருந்தான்
கேட்டு வாங்கிச் செல்லும்
குணம் பரதனுக்கு இல்லை.









Sunday, July 20, 2014

குடை



குடைகள் அதிகமாக பயன்படுத்தப்படுவது மழைக் காலங்களில். வெயில்காலத்தில் குடை பிடித்து நடப்பவர்கள் அரிது. கிராமப்புற வயற்புறங்களில் வயோதிகர்கள் கோடைகால அறுவடை காலங்களில் வெயிலை தணிக்க குடைபிடித்து நிற்பதை இன்றும் பார்க்கலாம். குடையை வெயில் மழைக்கு அப்பாலும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். புகைப்பட ஸ்டுடியோக்களில் சிதறும் ஒளியை இலக்கு நோக்கி குவியப்படுத்த குடைகளை உபயோகப்படுத்துவதையும் பார்க்கிறோம். கோவில் சந்நிதியில் சாமி வலம்வரும்போது பெரியதொரு குடையை தூக்கிப் பிடித்தே பின்செல்வார்கள். கடற்கரையில் காற்றுவாங்க அமர்கையிலும் பெரியதொரு குடையை விரிக்கிறார்கள். குடைகள் இவ்வாறு பலவகைகளில் பயன்படுத்தப் பட்டாலும், வெகுஜன மக்களுக்கு அது மழையோடு சம்பந்தப்பட்டதுதான். பல ஆண்டுகளாக உலகம் முழுதும் நடைமுறையில் பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான கருவி குடை.

குடை தயாரிப்புகளில் குறிப்பாக குடையை விரிப்பதில் பல்வேறு யுத்திகள் வந்துகொண்டே இருந்தாலும் இன்றும் நிலைத்து நிற்பது தாத்தா காலம் தொட்டு தொடர்ந்து வரும் பழைய கால பாணிதான். பொத்தான்களை அழுத்தி குடையை விரிக்கும் திட்டம் ஆரம்பத்தில் ஒரு கவன ஈர்ப்பை நடத்தினாலும் கொஞ்ச நாட்களிலேயே சரியாக வேலைசெய்யாமல் போவதை காணலாம். அவசரத்தில் குடையை விரிப்பதற்கு பொத்தானை அழுத்திக் கொண்டெ இருந்தாலும் விரிய முற்படாமல் பொறுமையை சோதிக்கும் தருணங்கள் அதிகம். ஏன்தான் அவற்றை இவ்வளவு செலவு செய்து வாங்கினோம் என்றே தோன்றும். பெரும்பாலும் பயன்படுத்தப் படுவது கருப்பு நிறக் குடைகளே. குடை தயாரிப்பில் ஏன் பல்வேறு வண்ணங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என சிறுவயதில் சிந்திப்பதுண்டு. ஒருவேளை கருப்பு நிறக் குடைகள் குறைந்த தயாரிப்பு செலவாக இருக்கக் கூடும் என்றே நினைக்கிறென். எங்கு பார்த்தாலும் கருப்பு நிறமாக தென்படுகையில் ஒருவர் ( சிலர்) மட்டும் அங்கே வேறொரு வண்ணத்தில் குடை வைத்திருந்தால் பார்வைக்கே குளுமையாகத் தோன்றுகிறது. பள்ளிப்பருவத்தில் அவ்வாறு ஒரு சில வண்ணக் குடைகளை (இறக்குமதி: அரபுநாடுகள்) ஊரில் பார்ப்பதுண்டு. அப்படிப்பட்ட கணங்களில் பார்வையிலிருந்து மறையும் வரையிலும் மழைக்கு மத்தியிலும் அக்குடையையே வெறித்து பார்ப்பதுண்டு. ஒரு இனம்புரியாத காதல் வண்ணக் குடைகள் மீது.



இப்போது உள்தெரியும் குடைகளைப் பார்க்கிறேன். ஆஹா! உடைகளில்தான் இத்திட்டம் வந்தது.. இப்போது குடையிலுமா என அதிசயிக்கிறேன். பெரும்பாலும் இம்மாதிரியான குடைகளை ஆசிய நாட்டுப் பெண்கள் பிடித்து வருகிறார்கள். அதிலும் அவர்களது பாரம்பர்ய வேலைப்பாடுகள் நிறைந்த குடைகளைப் பார்க்கும்போது வியப்பு அடங்கவே நேரமாகிறது.



மேற்கத்தியர்கள் உபயோகிக்கும் குடை - அது ஒரு வித்யாசம். அவர்களின் உயரம்/பருமன் நம்மைவிட சற்று பெரியதாக இருப்பதாலும், குடையை குடையாகவே பயன்படுத்தும் விதத்திலும் அவர்கள் வைத்திருக்கும் குடையின் அளவு மிகவும் பெரிதாக இருக்கின்றன. குடையை குடையாக பயன்படுத்துதல் என ஏன் சொல்கிறேன் என்றால் நம்மூரில் நவநாகரிக குடைகள் என சிறுசிறு அளவில் பயன்படுத்துகிறேன் என மழையில் கை, கால் பின்புறம் என எல்லாயிடத்தையும் நனைத்துக் கொண்டே நடந்து கொண்டிருப்போம். ஆனால் இம்மாதிரியான பெரிய அளவு குடையில் துளி கூட விழாது. இது மடிப்பு கலையாத கோட்-சூட் அணிந்து செல்லும் அலுவலகர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. இன்னொரு சௌகர்யம். ஒரு பெரிய குடையில் நாமிருவர்-நமக்குஒருவர் என்ற திட்டத்தில் இருக்கும் ஒன்று ஆசியக் குடும்பம் ஒரு அவசர நாளில் மழையை சமாளித்துவிடலாம். நம்மூரில் குடையில்லாமல் மழையில் நனைந்துவரும் நண்பர்/உறவினரை வழியில் பார்த்தால் அவ்வளவுதான். தியாக மனப்பான்மையில் அவரையும் குடைக்குள் வரச் சொல்லி கடைசியில் அவரும் நனைந்து , நாமும் நனைந்து குடை என்பதன் பயனே அற்றுப்போய்விடும்.




அழுத்தமான காற்றோடு ச்சோவென மழை கொட்டும்போது இதுபோன்ற பெரிய அளவு குடைகளை பிடித்து நடப்பதே சவால்தான். உள்புகுந்த காற்று அங்கேயும் இங்கேயும் நம்மைத் தள்ளும்போது கைகளும் வலிக்க ஆரம்பித்துவிடும். திடமான கைகள், உடம்புவாகு உள்ளவர்களுக்கு மட்டுமே இது சரிப்பட்டுவரும். பார்ப்பதற்கு அழகாக, எடுப்பாக இருக்கும் குடைகள் இதுபோன்ற மழைநேரங்களில் சரியாக ஒத்துழைப்பு தராமல் இருப்பதையும் பார்க்கலாம். வேகமான காற்று குடையையை பிரட்டிப் போட்டுவிடும். அப்போது குடை சட்டென மழை சேகரிக்கும் பாத்திரமாக மாறிவிடுவதைப் பார்க்கலாம். இரண்டு அடுக்குக் குடைகளையும் பார்க்கிறேன். வேகமான காற்றை இது ஓரடுக்குக் குடையை விட சமாளிக்கும் எனக் கருதுகிறேன். அடுக்குகளின் இடைவெளி பெரிதாகி மழை நம்மீது ஊற்றாமல் இருந்தால் சரி.




தாத்தா, அப்பா காலத்தில் புறநகர் மற்றும் கிராமங்களில் பழுதான குடைகளை சரிசெய்யவே சில ஆட்கள் கோடைகாலத்தில் வந்துபோவதுண்டு. குடைகளில் ஓட்டை விழுந்தாலோ, தையல் பிரிந்தாலோ அல்லது கம்பிகள் சரிவர பொருந்தாமல் வெளியெ நீட்டிக்கொண்டும், குடையை கிழித்துக் கொண்டும் இருந்தாலோ அவர்களிடம் கொடுத்து குறைந்த விலையில் சரிசெய்துகொள்ளலாம். எப்போது பொத்தான் மூலம் விரியும் குடைகள் நிறைய புழக்கத்திற்கு வந்தனவோ, அப்படிப்பட்ட குடை சரிசெய்பவர்களின் வருகையும் நின்றுபோய்விட்டது. பழுதாகிக் கொண்டிருக்கும் குடையை அவ்வளவு சீக்கிரம் தூக்கிப்போடவும் மனசில்லை என்றாலும் நாகரிகம் கருதியோ வேறுவழியில்லை என்றோ வருகையில் புதியகுடை ஒன்றை வாங்கிவிடுகிறோம்.





குடை என் வாழ்வில் பதிந்துவைத்த மறக்கவேண்டும் என நான் நினைக்கிற ஆனால் மறக்கவே முடியாத கருப்பு நினைவுகள் நிறைய.

சென்றவாரம் அலுவலகம் விட்டு வீடு செல்லும் நேரம் அடைமழை. மேலதிகாரி அறையில் பெரும்பாலும் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு குடையை எடுத்துச் சென்றேன். அடுத்தநாள் மழையில்லை. திருப்பிக் கொடுக்கலாம் என எடுத்துச் சென்றால் பேருந்து பயணத்தில் மேல்தட்டில் வைத்துவிட்டு இறங்கும்போது அதை எடுக்காமல் மறந்து தொலைத்துவிட்டேன். இது இரண்டாவது முறை. அவரிடம் சொல்லலாமா வேணாமா? புதுக் குடையை (சென்றமுறை போலவே) வாங்கிக் கொடுக்கலாமா என்றே யோசனை. சென்றமுறை புதுக்குடை வாங்கிக் கொடுக்கையில் "ஏன் இப்படி புதுக்குடை வாங்கனும்? அது போயிட்டு போகுது"....என அன்பாக, அக்கறையோடு கடிந்து கொண்டார். சிலபேருக்கு குடி ஒரு பிரச்சினை. எனக்கு குடைப்பிரச்சினை. குடையைத் தொலைக்கும் பழக்கம் சிறார்வயது முதல் தொடர்ந்து வருகிறது. முன்பு அம்மா/அப்பாவிடம் திட்டுவாங்கினேன். இப்போது மனைவியிடமிருந்து. சிலர் வீட்டுக்குச் சென்று திரும்புகையில் மழை பிடித்துக் கொண்டால் அவர்களும் தங்களிடம் இருக்கிற குடையைக் கொடுத்து அனுப்புவார்கள். அது திரும்பி அவர்களிடமே போய் சேருமா என்பதற்கு நான் திருப்பிக் கொடுக்கும் வரையிலும் உத்திரவாதம் இல்லை. தன் குடையைத் தொலைத்துவிட்டு இன்னொன்று வாங்குவது வேறு. அடுத்தவரோட குடையைத் தொலைத்துவிட்டு புதிதாய் இன்னொன்று அவருக்கு வாங்கிக் கொடுப்பது வேறு. இனி மழையோடு எப்போதும் நேருக்கு நேர் பார்த்துவிடலாம் என முடிவெடுத்து இருக்கிறேன்.

தொலைத்தல் மட்டுமல்லாமல் வேறொன்றும் நடந்திருக்கிறது. பதினொன்றாம் வகுப்பு படித்த நேரம். மழைக் காலம். அப்பா வாங்கிக் கொடுத்த புத்தம் புதிய குடையை எடுத்துக்கொண்டு ஒரு மழை நாளில் நண்பன் வீட்டுக்குச் சென்றேன். குடையில் இருக்கும் நீரெல்லாம் கீழிறங்கட்டும் என வாசலிலே குடையை மடிக்காமலேயே வைத்துவிட்டு உள்ளெ நுழைகிறேன். நண்பனிடம் பேசிமுடித்து கிளம்பும்போது குடையையே காணோம். குடை எங்கே எனத் தேடினால் காருக்குள் நசுங்கி உள்ளெ மறைந்திருக்கிறது. நண்பனின் அண்ணன் அம்பாசிடர் காரை வீட்டுமுன் நிறுத்தும்போது விரித்து வைத்த குடை தெரியாமலேயே அதை இடித்து அதன் மீதே நிறுத்தியிருக்கிறான். ஒருமுறை மட்டுமே பயன்படுத்திய குடை இப்போது குப்பையில் தூக்கிவீசக் கூடிய நிலையில் முறிந்துபோயிருக்கிறது. அதைப் பார்க்கும்போதே அவ்வளவு மழைக்கு நடுவிலும் என் கண்ணீர் ரத்தமாக வடிந்தது. நண்பனும் அவனது அண்ணனும் இன்னொரு குடையை வாங்கிக் கொடுக்கிறேன் என ஆறுதல் சொல்லுகையில் துன்பத்தை வெளிக்காட்டாமல் "சே சே! அதெல்லாம் வேணாம்! பரவாயில்லை" என நாகரிகமாக(!) நடந்துகொண்டு வீட்டிற்கு வந்தால் திட்டுக்கள் ஒவ்வொன்றும் இடிகளாய் இறங்கியது. குடைக்கும் எனக்கும் ஏகப் பொருத்தம். ஜென்ம உறவு! இல்லை இல்லை! ஜென்மப் பகை!


Wednesday, April 16, 2014

Indian T20 League, 2014 (தொடரின் முதலாட்டம்) கொல்கத்தா Vs மும்பை

கருஞ்சிறுத்தை பாலாஜி இல்லாத கொல்கத்தா! வழக்கம் போலவே இந்த ஆண்டும் இவர்களை ஆதரிக்க வேண்டுமா என்ற தயக்கம் ஒருபுறம். சுனில் நரின், பியூஷ் சாவ்லா சுழல் கூட்டணியே இறுதிவரை இவர்களை கொண்டுவருமே என்ற அசட்டு நம்பிக்கை இன்னொருபுறம்..

கிழ சிங்கம் காளிங்கன், முரடன் கம்பீர், யூஸ்லஸ் பதான் மற்றும் ஊத்தப்பன் இவர்கள் வழக்கம் போல சொதப்பப் போகிறார்கள் என்பதில் மட்டும் தீர்க்கமாக இருந்த எனக்கு காளிங்கர் மட்டும் "இன்னும் நான் சோடை போகவில்லை" என நடுவிரலை காட்டினார். தொடரின் முதல் நான்கு, ஆறு இரண்டையும் துவங்கிய வீரர் மங்கள் பாண்டேவோடு காளிங்கர் ஆடிய அதிரடி மற்றும் பொறுப்பான ஆட்டம் நெம்புகோல் போல பயன்பட்டு ரன்கள் என்ற கடும்பாறையை கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்த்திச் சென்றது. எதிர்பார்த்தபடியே ஊத்தப்பனும், பதானும் வந்து போனார்கள். யாதவரின் புண்ணியத்தில் இலக்கு 163. மும்பைக்கு சவால் விடும் இலக்கே.

மும்பை பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சாலச் சிறந்தது. அதில் மலிங்கா, ஜாகீர் பந்துவீச்சை ஒரளவிற்கு சமாளித்தாகிவிட்டது. மற்றபடி மும்பை அணியில் சொல்லிகொள்வதுபொல பந்துவீச்சில் யாருமில்லை. ஓஜா, ஹர்பஜர் இருவருமே சோபிக்கத் தவறி விட்டனர் என்ற அனுதாபமே கொஞ்சம் கூட எனக்கு இல்லை. சென்னையிலிருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றிக்கொண்டிருக்கும் ஹசி ஒருவரே போதும், தனியாளாக நின்றே வெற்றியின் அருகே அழைத்துச் சென்றுவிடுவார். எப்படி சுனில் நரினை சமாளிக்கப் போகிறார் என்ற ஆர்வம் விஸ்வரூபம் எடுக்கும் முன்பேயே நமத்துப் போன புஸ்வானமாகிப் போனார் ஹசி. அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ராயுடு மற்றும் ரோஹித். நிலைத்து நின்று ஆடினாலும் ரன்களை துரத்த முடியாமல் போனது. சுழல் பந்துவீச்சில் நரினொடு சாவ்லா சேர்ந்துகொண்டதால் வெற்றி இலக்கு கானல் நீராக மாறத் தொடங்கியது. மார்க்கலின் பந்துவீச்சும் நேர்த்தியாக அமைந்து மிகப்பெரிய அரணாக எழுந்தது. மும்பை அணி எவ்வளவு முக்கியும் பலனில்லாமல் போனது. போலார்டு போனத் தொடரிலேயே பல்புடுங்கின பாம்பாகவே பலமுறை வலம் வந்தார். இந்த முறையும் அதையே வழி மொழிந்திருக்கிறார்.

41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என்பது மும்பை அணி எந்த அளவிற்கு பலகீனம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. ஆனாலும் மலிங்கா, ரோஹித், ஹசி போன்றவர்கள் இனிவரும் ஆட்டங்களில் மும்பையை சீர்தூக்க முடியும். கொல்கத்தா அரையிறுதிக்கு தகுதிபெறும் என்றெ நினைக்கிறென். பார்க்கலாம்.