Thursday, March 14, 2013

திருட்டு




தொப்பையுடன் ஓடி துரத்திப் பிடிக்க
ரொம்பவும் கடினமாகப் பட்டது ஏட்டையாவுக்கு
மொட்டைச் சுவரை தாண்ட முடியவில்லை
பார்வையிலிருந்து மறைந்தே விட்டான் திருடன்
கால்தட்டி கண்ணடைத்து மூச்சு வாங்கியதால்
அருகேயிருந்த பொட்டிக்கடையில்
ஆற அமர ஓய்வெடுத்து ஓசியில் சோடா குடித்து
ஸ்டேஷன் திரும்புகையில்
வேகமாக வந்த வாகனங்கள் இரண்டை
நின்றபடியே பிடித்து பாக்கட் நிரப்பி வந்தார்
திருட்டுத் தொழில் பலரைப் பாதிக்கிறது என்பது
திருடனுக்குத் தெரியவேயில்லை



Monday, March 11, 2013

தேர்தல்




ஏராளம் எண்ணிக்கையில் தொகுதி வேட்பாளர்கள்
சுறுசுறுப்பாக களத்தில் திரியும் பிரமுகர்கள்
ஓட்டு பிரியுமென்ற அதிர்ச்சியில் பெரிய கட்சிகள்
எல்லாத் திசையிலும் பணம் பொருள் இலவசம்
காற்றில் கலந்து விட்டிருந்த லஞ்ச வாசம்
பரப்பரப்பான வாக்குப் பதிவின் முந்தைய இரவு
பரலோகம் சென்றார் சுயேட்சை ஒருவர் மாரடைப்பில்
வாங்கியவற்றை ஏப்பமிட்டு வரவிருக்கும் இடைத்தேர்தலை
வரவேற்கத் தயார் நிலையில் ஊர் மக்கள்








Thursday, March 7, 2013

மழை




நதிகள் கரை புரண்டோடும் மழைக்காலம்
மதகுகள் வாய்திறக்க கண்மாய் நிறையும்
மரஞ்செடிகள் தரைதட்டி பாதை மறிக்கும்
நஞ்சை வயல்களில் நெற்கதிர் மூழ்கும்
குளம் குட்டையில் சாரைகள் நெளியும்
கொஞ்சமாய் வெக்காளித்து வானம் இருளும்
சாலை முகங்கள் குடைக்குள் ஒளியும்
வேக வாகனம் நீரள்ளித் தெளிக்கும்
பள்ளி மூடப்பட்டு தேர்வு தள்ளிப்போகும்
காகிதக் கப்பல்விட்டு சிறார் குதூகலிக்கும்
ஆடுமாடுகள் வாசலில் அடைந்து படுக்கும்
கூரைவழி வடிவதை பாத்திரம் சேகரிக்கும்
மின்சாரம் ஒரேயடியாய் துண்டிக்கப் படும்
கடைகள் மூடி நடமாட்டம் குறையும்
தவளைகள் இடைவெளி விட்டு கத்தும்
ஊரே சீக்கிரம் உறங்கி விடும்
காத்து மழை இடி மின்னல் தொடரும்
அரிக்கேன் அணையாமல் விழித்திருக்கும்.


Saturday, February 16, 2013

ஒளி




நேரம் என்ன தம்பி இருக்கும்
கடந்து போகும் முதியவர் கேட்டார்
ஐந்தரை மணி தாத்தா
அங்காடி இன்னும் தொறந்திருக்குமா
சந்தேகம்தான் சீக்கிரம் போங்க
கிருஷ்ணாயில் வாங்கணும் தீந்துபோச்சி
வேலை முடிஞ்சி வந்த சோர்வுல
நேத்திக்கே வாங்க மறந்திட்டேன்
பேத்திக்கு பரிட்சை நாளைக்கு
புலம்பிக்கொண்டெ நடையைக் கூட்டினார்
தாமதமாக வந்துநின்ற டவுன் பஸ்ஸினுள்
கூட்ட நெரிசலிலும் ஏறிக்கொண்டு
இன்வெர்ட்டர் வாங்கும் பணத்தை
இன்னொருமுறை இருக்கிறதா என
சரிபார்த்துக் கொண்டென்.








(க)வலை




கவலை என்ற வலையில்
சிலந்தியும் நீ இரையும் நீ
நல்லெண்ண துடைப்பத்தால்
(க)வலை அகற்று
தன்னம்பிக்கை நெம்புகோலால்
மூலை முடுக்கை விட்டு
உன்னையே நீ நகர்த்து
இருத்தலில் மனதை ஒருத்து
இயங்கிக் கொண்டெ இரு.