Saturday, August 27, 2022

பணி நிறைவு பாராட்டு விழா




நேற்றிரவு குடும்ப மருத்துவரது பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். மனநிறைவாக இருந்தது. எனது வாழ்க்கையில் இதுதான் முதல்முறை ஒரு பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு சென்றது. மருத்துவர் தமிழ்நாட்டுக்காரர். இங்கே நான் வசிக்கும் மாகாணத்தில் 35 வருடங்களாக மருத்துவ சேவை செய்து வந்தவர். தோராயமாக 75 நபர்களாவது வந்திருப்பார்கள். என்னைப் போன்ற ஒருசிலரே சக இந்தியர்கள். அமெரிக்கர்கள் ஒவ்வொருவரும் மருத்துவர் எப்படி தங்களது உடல், மன குறைகளை தீர்த்தார், மருத்துவர் என்பதையும் தாண்டி சகஜமாக நட்பு பாராட்டினார் என சிலாகித்தும், கண்ணீர் விட்டும் பேசினார்கள். பார்க்கவே நெகிழ்ச்சியாக இருந்தது.


இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அவரது மனைவி நோய்வார்ப்பட்டு இறந்து போனார். பிரிவுத்துயரம் அவரை வெகுவாக பாதித்தது. அப்போதே பணியிலிருந்து ஒய்வு பெற முடிவெடுத்தார். ஆனால் வீட்டில் உட்கார்வதை விட, மருத்துவ சேவையை தொடரலாம், அப்படி தொடர்வதால் தனக்கு ஏற்பட்டிருக்கும் பிரிவு துயரை சமாளித்து விடலாம் என எண்ணினார். அந்த வகையில் என்னை நீங்கள்தான் குணப்படுத்துனீர்கள், உங்களுக்கு நன்றி என வந்திருந்த அனைவரிடம் குறிப்பிட்டார்.


நிகழ்ச்சியின் நடுவே மருத்துவரது நோயாளி ஒருவர் முதியவர் கிடார் வாசித்து பாடினார். இன்னொரு நோயாளி - வட இந்தியர் அவரும் கிடார் வாசித்து சில இந்தி பாடல்களை பாடினார். மருத்துவரும் பாடினார். தான் தனது மனைவியிடம் அடிக்கடி பாடிக்காட்டும் பாடல் என "காலங்களில் அவள் வசந்தம்" பாடலை பாடினார். இடையிடையே தமிழ் வரிகளுக்கான ஆங்கில பொருளையும் குறிப்பிட்டார். "இதை அழாமல் பாட முயல்கிறேன்" என சொல்லிவிட்டு பாட ஆரம்பித்தவர் பாடலின் கடைசி வரிகளை பாடி முடிக்கும்போது உடைந்து அழுதுவிட்டார்.

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணி புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்

பால்போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞன் ஆக்கினால் என்னை



இந்த நிகழ்ச்சியினை மருத்துவரது மகள்கள் செவ்வனே நடத்தினார்கள்.

எல்லோரும் மருத்துவர் மீதான தங்களது எண்ணங்களை பகிர்ந்தபின், கடைசியாக மருத்துவர் பேசினார். தனது ஆரம்பகால மருத்துவ துறையில் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் தான் மேற்கொண்ட நான்கைந்து வருட பணிகளை தனது வாழ்க்கையில் மிக முக்கியமான, தான் இன்னமும் நினைத்து மகிழும் ஒன்றாக குறிப்பிட்டார். அப்போது ஒரு நோயாளிக்கு தான் கட்டணமாக வாங்கியது இரண்டு ரூபாய் என்றும், அமெரிக்கர்களுக்கு புரியும் விதத்தில் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு குவார்ட்டர் என்றும், பணம் என்றுமே அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக இருந்தததில்லை, மருத்துவ சேவை மூலம், மக்களின் வாழ்வினை மேம்படுத்துவது மட்டுமே தனது விருப்பமாக இருந்தது என்றும், பல நோயாளிகள் பொருளாதாரம் இல்லாமல் உழன்றதை கண்டு அவர்களுக்கு இவர் மருத்துவ சேவை மட்டுமல்லாமல் பொருளாதார உதவிகளையும் செய்ததையம், கிராம மக்கள் தன்னை கைராசி மருத்துவர் என அன்போடு அழைத்ததாகவும் பகிர்ந்தார். கிராம மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தார்களே ஒழிய மனதளவில் பணக்காரர்களாக இருந்தனர் என அவர் சொல்லும்போது அழுதே விட்டார். தனது உரையின் முடிவில் எல்லோரும் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள், அதுவே பெரியதொரு சொத்து, பிறரின் துயர் துடைப்பதில் பங்கெடுப்பதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களது துயர்களை சரிசெய்து விடலாம் எனவும் அறிவுரை வழங்கினார்.


இன்னொன்றும் குறிப்பிட்டார். அது "ஒவ்வொரு இரவும் தூங்கப்போகும்முன் உடன் வசிக்கும் ரத்த உறவுகளை (கணவன், மனைவி, அம்மா, அப்பா, மகன், மகள், தாத்தா, பாட்டி, பேரக்குழந்தை) கட்டிப்பிடித்து..அன்றைய நாளில் பிணக்கு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுவிட்டு தூங்கச் செல்லுங்கள். நாளை யார் யாரெல்லாம் சூரியனின் உதயத்தினை பார்க்கப்போகிறார்கள், பார்க்கப்போவதில்லை என யாரும் கணிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் மண நினைவோடு உறங்க செல்வது நலம்.".


நெடியதொரு மருத்துவ சேவை ஒருபுறம் இருந்தாலும் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், மனைவி, மூன்று மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள், என தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைவான வாழ்க்கை வந்திருக்கிறார் என்பதே பிரமிப்பாக இருக்கு. நேற்றைய நிகழ்ச்சியின் பல இடங்களில் எனக்கு கண்ணீர் முட்டியது. தொண்டை அடைத்தது. என் வாழ்க்கையில் எப்போதெல்லாம் நெருக்கமான உறவுகள், நட்புகள் திடீரென விலகி சென்றதோ அப்போதெல்லாம் கொஞ்ச நாட்களுக்கு, மாதங்களுக்கு பிரிவு துயரத்தை சந்தித்திருக்கிறேன். பிடித்த, மதிப்பிற்குரிய பள்ளி ஆசிரியர் மாற்றலாகி வேறொரு இடத்திற்கு செல்லும்போதும் துக்கம் கவ்வும். அதே போலவே பல வருடங்களாய் எனக்கு மருத்துவராக இருந்த இவரும். அந்த பொன்னான தருணங்களை பாதுகாப்பாக சேகரித்து வைக்கிறேன்.


இதே "காலங்களில் அவள் வசந்தம்" பாடலைத்தான் நேற்று மாலை ட்வீட்டர் ஸ்பேஸ் ஒன்றில் முதல்முறையாக பாடினேன். தற்செயலாக நடந்தது என்றாலும் ஒரே நாளில் ஒரே பாடல் என்பதில் ஆச்சர்யமாக இருந்தது. கண்ணதாசனின் கவித்துவமான எளிய தமிழ், காதல் வரிகள் காலங்கள் கடந்தும் எப்படி பல உள்ளங்களில் நிற்கிறது என்பதை உணரலாம்.


Monday, June 1, 2015

வளர்ச்சி




கிளம்பும் அவசரத்தில்
கிடைக்கும் வெளிச்சத்தில்
மழித்தும் மழிக்கப்படாமல்
தீவுகளாக ஒதுங்கியவைகளை
தொட்டுணரும் அன்றைய பொழுதில்
அவை
மேலும் சற்று
வளர்ந்திருக்கின்றன









உருவகம்




இளங்காற்று
இளம்பனி
இளவேனில்
இளங்கீற்று
இளநீர்
இளஞ்சூடு
இளம்பிறை
இளமை
இளம்பெண்
இளங்காதல்
இளையராஜா









Wednesday, May 27, 2015

தொக்கி நிற்பவை




நேரம் நெருங்கிக் கொண்டேயிருக்கு
விடப்போகும் கடைசி மூச்சினை
வீடே நெடுநாட்களாய் எதிர்பார்த்து நிக்குது
தொண்டையிலிருந்து இறங்கவா வேணாமா
போராட்டம் நடத்துது காய்ச்சிய பசும்பால்
கால்மாட்டில் கொள்ளுப்பேரன் பேத்திகள்
தலைமாட்டில் கணவன் மகன் மகள்
வெறிக்குது பார்வை விட்டத்தை நோக்கி
கடைசியாய்...கடைசியாய்..
நினைவுகளில் நிழலாடுகிறான்
கல்லூரிக் காதலன்









Thursday, May 21, 2015

தவறு




கனவிலும்கூட தவறொன்றை
சரியாக நிறைவேற்ற முடியலையே
யாரிடமாவது வசமாக
அகப்பட்டுக் கொள்கிறேன்
நொந்துகொண்டான் சாமானியன்
நிஜத்தில்கூட அவற்றை
செயல்படுத்த நினைக்காதேயென
உன்னை எச்சரிக்கத்தான்
அசரீரியாய் ஒலித்தது ஓர் குரல்









தாய்மொழி




தமிழ்ப் புத்தாண்டுதின
சிறப்பு அர்ச்சனைகளில் ஒலிக்கும்
சமஸ்கிருத மந்திரங்களுக்கு மத்தியில்
தமிழன்
தனது தாய்மொழியை
ஒருகணம் நினைத்துப்பார்க்கிறான்









Wednesday, May 20, 2015

முத்தம்




விரும்பிக் கொடுப்பவை
விரும்பாமல் கொடுப்பவை
விரும்பிப் பெற்றுக்கொள்பவை
விரும்பாமல் பெற்றுக்கொள்பவை
மொத்தமாய் நால்வகை.