Sunday, July 20, 2014

குடை



குடைகள் அதிகமாக பயன்படுத்தப்படுவது மழைக் காலங்களில். வெயில்காலத்தில் குடை பிடித்து நடப்பவர்கள் அரிது. கிராமப்புற வயற்புறங்களில் வயோதிகர்கள் கோடைகால அறுவடை காலங்களில் வெயிலை தணிக்க குடைபிடித்து நிற்பதை இன்றும் பார்க்கலாம். குடையை வெயில் மழைக்கு அப்பாலும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். புகைப்பட ஸ்டுடியோக்களில் சிதறும் ஒளியை இலக்கு நோக்கி குவியப்படுத்த குடைகளை உபயோகப்படுத்துவதையும் பார்க்கிறோம். கோவில் சந்நிதியில் சாமி வலம்வரும்போது பெரியதொரு குடையை தூக்கிப் பிடித்தே பின்செல்வார்கள். கடற்கரையில் காற்றுவாங்க அமர்கையிலும் பெரியதொரு குடையை விரிக்கிறார்கள். குடைகள் இவ்வாறு பலவகைகளில் பயன்படுத்தப் பட்டாலும், வெகுஜன மக்களுக்கு அது மழையோடு சம்பந்தப்பட்டதுதான். பல ஆண்டுகளாக உலகம் முழுதும் நடைமுறையில் பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான கருவி குடை.

குடை தயாரிப்புகளில் குறிப்பாக குடையை விரிப்பதில் பல்வேறு யுத்திகள் வந்துகொண்டே இருந்தாலும் இன்றும் நிலைத்து நிற்பது தாத்தா காலம் தொட்டு தொடர்ந்து வரும் பழைய கால பாணிதான். பொத்தான்களை அழுத்தி குடையை விரிக்கும் திட்டம் ஆரம்பத்தில் ஒரு கவன ஈர்ப்பை நடத்தினாலும் கொஞ்ச நாட்களிலேயே சரியாக வேலைசெய்யாமல் போவதை காணலாம். அவசரத்தில் குடையை விரிப்பதற்கு பொத்தானை அழுத்திக் கொண்டெ இருந்தாலும் விரிய முற்படாமல் பொறுமையை சோதிக்கும் தருணங்கள் அதிகம். ஏன்தான் அவற்றை இவ்வளவு செலவு செய்து வாங்கினோம் என்றே தோன்றும். பெரும்பாலும் பயன்படுத்தப் படுவது கருப்பு நிறக் குடைகளே. குடை தயாரிப்பில் ஏன் பல்வேறு வண்ணங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என சிறுவயதில் சிந்திப்பதுண்டு. ஒருவேளை கருப்பு நிறக் குடைகள் குறைந்த தயாரிப்பு செலவாக இருக்கக் கூடும் என்றே நினைக்கிறென். எங்கு பார்த்தாலும் கருப்பு நிறமாக தென்படுகையில் ஒருவர் ( சிலர்) மட்டும் அங்கே வேறொரு வண்ணத்தில் குடை வைத்திருந்தால் பார்வைக்கே குளுமையாகத் தோன்றுகிறது. பள்ளிப்பருவத்தில் அவ்வாறு ஒரு சில வண்ணக் குடைகளை (இறக்குமதி: அரபுநாடுகள்) ஊரில் பார்ப்பதுண்டு. அப்படிப்பட்ட கணங்களில் பார்வையிலிருந்து மறையும் வரையிலும் மழைக்கு மத்தியிலும் அக்குடையையே வெறித்து பார்ப்பதுண்டு. ஒரு இனம்புரியாத காதல் வண்ணக் குடைகள் மீது.



இப்போது உள்தெரியும் குடைகளைப் பார்க்கிறேன். ஆஹா! உடைகளில்தான் இத்திட்டம் வந்தது.. இப்போது குடையிலுமா என அதிசயிக்கிறேன். பெரும்பாலும் இம்மாதிரியான குடைகளை ஆசிய நாட்டுப் பெண்கள் பிடித்து வருகிறார்கள். அதிலும் அவர்களது பாரம்பர்ய வேலைப்பாடுகள் நிறைந்த குடைகளைப் பார்க்கும்போது வியப்பு அடங்கவே நேரமாகிறது.



மேற்கத்தியர்கள் உபயோகிக்கும் குடை - அது ஒரு வித்யாசம். அவர்களின் உயரம்/பருமன் நம்மைவிட சற்று பெரியதாக இருப்பதாலும், குடையை குடையாகவே பயன்படுத்தும் விதத்திலும் அவர்கள் வைத்திருக்கும் குடையின் அளவு மிகவும் பெரிதாக இருக்கின்றன. குடையை குடையாக பயன்படுத்துதல் என ஏன் சொல்கிறேன் என்றால் நம்மூரில் நவநாகரிக குடைகள் என சிறுசிறு அளவில் பயன்படுத்துகிறேன் என மழையில் கை, கால் பின்புறம் என எல்லாயிடத்தையும் நனைத்துக் கொண்டே நடந்து கொண்டிருப்போம். ஆனால் இம்மாதிரியான பெரிய அளவு குடையில் துளி கூட விழாது. இது மடிப்பு கலையாத கோட்-சூட் அணிந்து செல்லும் அலுவலகர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. இன்னொரு சௌகர்யம். ஒரு பெரிய குடையில் நாமிருவர்-நமக்குஒருவர் என்ற திட்டத்தில் இருக்கும் ஒன்று ஆசியக் குடும்பம் ஒரு அவசர நாளில் மழையை சமாளித்துவிடலாம். நம்மூரில் குடையில்லாமல் மழையில் நனைந்துவரும் நண்பர்/உறவினரை வழியில் பார்த்தால் அவ்வளவுதான். தியாக மனப்பான்மையில் அவரையும் குடைக்குள் வரச் சொல்லி கடைசியில் அவரும் நனைந்து , நாமும் நனைந்து குடை என்பதன் பயனே அற்றுப்போய்விடும்.




அழுத்தமான காற்றோடு ச்சோவென மழை கொட்டும்போது இதுபோன்ற பெரிய அளவு குடைகளை பிடித்து நடப்பதே சவால்தான். உள்புகுந்த காற்று அங்கேயும் இங்கேயும் நம்மைத் தள்ளும்போது கைகளும் வலிக்க ஆரம்பித்துவிடும். திடமான கைகள், உடம்புவாகு உள்ளவர்களுக்கு மட்டுமே இது சரிப்பட்டுவரும். பார்ப்பதற்கு அழகாக, எடுப்பாக இருக்கும் குடைகள் இதுபோன்ற மழைநேரங்களில் சரியாக ஒத்துழைப்பு தராமல் இருப்பதையும் பார்க்கலாம். வேகமான காற்று குடையையை பிரட்டிப் போட்டுவிடும். அப்போது குடை சட்டென மழை சேகரிக்கும் பாத்திரமாக மாறிவிடுவதைப் பார்க்கலாம். இரண்டு அடுக்குக் குடைகளையும் பார்க்கிறேன். வேகமான காற்றை இது ஓரடுக்குக் குடையை விட சமாளிக்கும் எனக் கருதுகிறேன். அடுக்குகளின் இடைவெளி பெரிதாகி மழை நம்மீது ஊற்றாமல் இருந்தால் சரி.




தாத்தா, அப்பா காலத்தில் புறநகர் மற்றும் கிராமங்களில் பழுதான குடைகளை சரிசெய்யவே சில ஆட்கள் கோடைகாலத்தில் வந்துபோவதுண்டு. குடைகளில் ஓட்டை விழுந்தாலோ, தையல் பிரிந்தாலோ அல்லது கம்பிகள் சரிவர பொருந்தாமல் வெளியெ நீட்டிக்கொண்டும், குடையை கிழித்துக் கொண்டும் இருந்தாலோ அவர்களிடம் கொடுத்து குறைந்த விலையில் சரிசெய்துகொள்ளலாம். எப்போது பொத்தான் மூலம் விரியும் குடைகள் நிறைய புழக்கத்திற்கு வந்தனவோ, அப்படிப்பட்ட குடை சரிசெய்பவர்களின் வருகையும் நின்றுபோய்விட்டது. பழுதாகிக் கொண்டிருக்கும் குடையை அவ்வளவு சீக்கிரம் தூக்கிப்போடவும் மனசில்லை என்றாலும் நாகரிகம் கருதியோ வேறுவழியில்லை என்றோ வருகையில் புதியகுடை ஒன்றை வாங்கிவிடுகிறோம்.





குடை என் வாழ்வில் பதிந்துவைத்த மறக்கவேண்டும் என நான் நினைக்கிற ஆனால் மறக்கவே முடியாத கருப்பு நினைவுகள் நிறைய.

சென்றவாரம் அலுவலகம் விட்டு வீடு செல்லும் நேரம் அடைமழை. மேலதிகாரி அறையில் பெரும்பாலும் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு குடையை எடுத்துச் சென்றேன். அடுத்தநாள் மழையில்லை. திருப்பிக் கொடுக்கலாம் என எடுத்துச் சென்றால் பேருந்து பயணத்தில் மேல்தட்டில் வைத்துவிட்டு இறங்கும்போது அதை எடுக்காமல் மறந்து தொலைத்துவிட்டேன். இது இரண்டாவது முறை. அவரிடம் சொல்லலாமா வேணாமா? புதுக் குடையை (சென்றமுறை போலவே) வாங்கிக் கொடுக்கலாமா என்றே யோசனை. சென்றமுறை புதுக்குடை வாங்கிக் கொடுக்கையில் "ஏன் இப்படி புதுக்குடை வாங்கனும்? அது போயிட்டு போகுது"....என அன்பாக, அக்கறையோடு கடிந்து கொண்டார். சிலபேருக்கு குடி ஒரு பிரச்சினை. எனக்கு குடைப்பிரச்சினை. குடையைத் தொலைக்கும் பழக்கம் சிறார்வயது முதல் தொடர்ந்து வருகிறது. முன்பு அம்மா/அப்பாவிடம் திட்டுவாங்கினேன். இப்போது மனைவியிடமிருந்து. சிலர் வீட்டுக்குச் சென்று திரும்புகையில் மழை பிடித்துக் கொண்டால் அவர்களும் தங்களிடம் இருக்கிற குடையைக் கொடுத்து அனுப்புவார்கள். அது திரும்பி அவர்களிடமே போய் சேருமா என்பதற்கு நான் திருப்பிக் கொடுக்கும் வரையிலும் உத்திரவாதம் இல்லை. தன் குடையைத் தொலைத்துவிட்டு இன்னொன்று வாங்குவது வேறு. அடுத்தவரோட குடையைத் தொலைத்துவிட்டு புதிதாய் இன்னொன்று அவருக்கு வாங்கிக் கொடுப்பது வேறு. இனி மழையோடு எப்போதும் நேருக்கு நேர் பார்த்துவிடலாம் என முடிவெடுத்து இருக்கிறேன்.

தொலைத்தல் மட்டுமல்லாமல் வேறொன்றும் நடந்திருக்கிறது. பதினொன்றாம் வகுப்பு படித்த நேரம். மழைக் காலம். அப்பா வாங்கிக் கொடுத்த புத்தம் புதிய குடையை எடுத்துக்கொண்டு ஒரு மழை நாளில் நண்பன் வீட்டுக்குச் சென்றேன். குடையில் இருக்கும் நீரெல்லாம் கீழிறங்கட்டும் என வாசலிலே குடையை மடிக்காமலேயே வைத்துவிட்டு உள்ளெ நுழைகிறேன். நண்பனிடம் பேசிமுடித்து கிளம்பும்போது குடையையே காணோம். குடை எங்கே எனத் தேடினால் காருக்குள் நசுங்கி உள்ளெ மறைந்திருக்கிறது. நண்பனின் அண்ணன் அம்பாசிடர் காரை வீட்டுமுன் நிறுத்தும்போது விரித்து வைத்த குடை தெரியாமலேயே அதை இடித்து அதன் மீதே நிறுத்தியிருக்கிறான். ஒருமுறை மட்டுமே பயன்படுத்திய குடை இப்போது குப்பையில் தூக்கிவீசக் கூடிய நிலையில் முறிந்துபோயிருக்கிறது. அதைப் பார்க்கும்போதே அவ்வளவு மழைக்கு நடுவிலும் என் கண்ணீர் ரத்தமாக வடிந்தது. நண்பனும் அவனது அண்ணனும் இன்னொரு குடையை வாங்கிக் கொடுக்கிறேன் என ஆறுதல் சொல்லுகையில் துன்பத்தை வெளிக்காட்டாமல் "சே சே! அதெல்லாம் வேணாம்! பரவாயில்லை" என நாகரிகமாக(!) நடந்துகொண்டு வீட்டிற்கு வந்தால் திட்டுக்கள் ஒவ்வொன்றும் இடிகளாய் இறங்கியது. குடைக்கும் எனக்கும் ஏகப் பொருத்தம். ஜென்ம உறவு! இல்லை இல்லை! ஜென்மப் பகை!